புதுச்சேரி: அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பாண்லே நிறுவனம் மூலம் நடைபெறும் பால் விநியோகம் குறைந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் இருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் பால் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்குப் போக மீதமுள்ள பாலை பாண்லே நிறுவனத்திற்கு வழங்குகின்றன. இதனால் புதுச்சேரியில் அடிக்கடி பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில், இளங்கோ நகர் பகுதியில் உள்ள பாண்லே பால் பூத் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், துணைத் தலைவர் அனந்தராமன், மகிளா காங்கிரஸ் சேர்ந்த பஞ்சகாந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.