புதுச்சேரி:மேரி உழவர்கரையைச் சேர்ந்தவர் 22 வயது இளைஞர். கல்லூரி மாணவரான இவர், இரண்டு தினங்களுக்கு முன்பு தனது தோழியுடன், காரைக்கால் 100 அடி சாலையில் உள்ள ‘ஜே ஜே’ தங்கும் விடுதிக்குச் சென்று தங்கியுள்ளார். அப்போது அந்த அறையில் தொலைப்பேசி வயர் இணைப்பு பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து தனது செல்போன் உதவியுடன் அங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அந்த பாக்சை பிரியன் பிரித்துள்ளார்.
அப்போது அவற்றில் மிகச் சிறிய அளவிலான நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பது உறுதியானது. அதைக் கண்டுபிடித்து அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பரிசோதிக்கப் பிரியன் தரப்பு முயன்ற நிலையில், அதை அழிப்பதற்கான முயற்சிகளை விடுதி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
பெண்களை தனி அறையில் ஆபாசமாகப் படம்பிடித்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட முயன்றதோடு அவற்றை அழிக்க முயற்சித்ததாக விடுதியின் மேலாளர் மற்றும் ஊழியர் ஆகியோர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் உருளையன்பேட்டை காவல் நிலையம் சென்று பிரியன் முறையிட்டார்.