புதுச்சேரி:புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூபாய் 5 என்ற அளவிலும்; டீசல் மீது ரூபாய் 10 என்ற அளவிலும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வரியினை இன்று (4-11-21) முதல் குறைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் புதுச்சேரி அரசும், தனது பங்கிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை சுமார் 7 ரூபாய் அளவில் குறைக்க முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் இவ்வளவு விலை குறையுமா?
இந்த வரி குறைப்பு இன்று 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒன்றிய அரசு மற்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்பு மூலம் லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை சுமார் ரூபாய் 12.85 மற்றும் டீசல் விலை சுமார் ரூபாய் 19ஆம் குறையும்.
இந்த வரி குறைப்பானது அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளிப் பரிசாக அமையும். இதனால் கரோனா நோய்த் தொற்றால் முடங்கிக் கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நேற்று (நவ.03) பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 107.71, டீசல் விலை ரூ.102.6 இருந்தது. இந்த வாட் வரி குறைப்பின் மூலம் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.94க்கும்; டீசல் லிட்டர் 83.58க்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'அண்ணாத்த' தீபாவளி - தலைவர் தரிசனத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்!