புதுச்சேரி செவிலியர்கள் போராட்டம் புதுச்சேரி:புதுச்சேரியில் கரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் 165 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மாதம் 15 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த செவியர்களுக்கு அரசு செவிலியர் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இக்கட்டான காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் எனக் கூறி பல்வேறு கட்ட போரட்டங்கள் நடத்தினர். இதனால் 3 மாதத்திற்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 4ஆம் தேதிக்குப் பிறகு அவர்கள் பணி நீட்டிப்பு செய்யப்படவில்லை. இதனிடையே புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறைக்கு 105 செவிலியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணியிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று முன்தினம் (செப்.29) முதல் தொடர்ந்து 2-வது நாளாக சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2 பேர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த திமுக எதிர்கட்சித் தலைவர் சிவா, செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது செவிலியர்கள் தங்களை கோரிக்கைகளை கண்ணீர் மல்க கூறினர். மேலும், புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் செவிலியர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, ‘உங்களுடன் எப்போது நாங்கள் இருப்போம். முதலமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்துவோம்’ எனக் கூறினர்.
இது குறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் தாட்சாயணி கூறுகையில், “கரோனா காலத்திலிருந்து தற்போது வரை ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வந்தோம். இந்நிலையில், ஜீலை மாதத்தில் பணி நீட்டிப்பு செய்யப்படவில்லை. இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எங்களுடன் பேசினார். அப்போது என்னால் தற்போது ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார். அதனால்தான் தற்போது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளோம். கரோனா தொற்றின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்ட காலத்தில் பணி செய்தோம். எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:குன்னூர் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!