இன்று (நவ. 26) அதிகாலை கரையைக் கடந்த நிவர் புயலின் தாக்கத்தால், புதுவையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் பெயர்ந்து சாலையில் வீழ்ந்தன. அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் பணிகளில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியை முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள பெரியார் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்ட அவர், அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் நிவாரண மையத்திற்குச் சென்ற அவர் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.