தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி அமைச்சரவை: பெருமையும் வேதனையும்! - puducherry ministers

40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒருவர் அமைச்சராகியிருப்பதாக கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

Puducherry ministers profile
Puducherry ministers profile

By

Published : Jun 27, 2021, 5:46 PM IST

Updated : Jun 28, 2021, 6:53 AM IST

புதுச்சேரி புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. என் ஆர் காங்கிரஸ் சார்பில் 3 அமைச்சர்களும், பாஜக சார்பில் 2 அமைச்சகர்களும் பதவியேற்றனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

என் ஆர் காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் பதவியேற்றனர். பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த 5 அமைச்சர்கள் குறித்து காண்போம்.

சந்திர பிரியங்கா: 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் அமைச்சர்!

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் ரேணுகா அப்பாதுரை என்பவர் கல்வி அமைச்சராக இருந்தார். அதன்பிறகு பிரியங்காவுக்குதான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சந்திர பிரியங்கா

இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் ஆவார். இவர் இரண்டாவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்று இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

தேனி ஜெயக்குமார்:

தேனி ஜெயக்குமார்

என் ஆர் காங்கிரஸின் மங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜெயக்குமார், மூன்றாவது முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இவர் இரண்டு முறை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார்.

லட்சுமி நாராயணன்:

லட்சுமி நாராயணன்

என் ஆர் காங்கிரஸின் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், மூன்றாவது முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார்.

காங்கிரஸை கவிழ்த்த நமச்சிவாயம்:

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம், கட்சிக்கு எதிராக செயல்படுவதாக 2021 ஜனவரி 25ஆம் தேதி கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் காங்கிரஸை விட்டு விலகினார். 2021 ஜனவரி 28ஆம் தேதி பாஜக தேசிய செயலர் அருண் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.

நமச்சிவாயம்

2016ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளராக நமச்சிவாயத்தை முன்னிறுத்தி வென்றி கண்ட காங்கிரஸ், நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது. அப்போதிருந்தே கட்சிக்குள் புகையத் தொடங்கியது, புதுச்சேரி காங்கிரஸின் ஆட்சி கவிழ நமச்சிவாயம் முக்கிய காரணகர்த்தாவாக பார்க்கப்படுகிறார். 2021 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பாக மண்ணாடிபட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். புதுச்சேரியின் புதிய அமைச்சரவையில் தற்போது அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சை நாயகன் சாய் சரவணக்குமார்:

புதுச்சேரியின் புதிய அமைச்சரவையில் பாஜக சார்பாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சாய் சரவணக்குமார், சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவருக்கும் பாஜகவை சேர்ந்த ஜான்குமார் என்பவருக்கும் அமைச்சர் பதவிக்கான போட்டி நிலவியது. ஜான்குமார் ஆதரவாளர்கள் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த தலைமை சாய் சரவணக்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரைத்துள்ளது. ஊசுடு தொகுதியில் நின்று வெற்றிபெற்ற இவர் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

சாய் சரவணக்குமார்

அமைச்சராகும் முன்பே இவர் ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. புதுச்சேரியில் படித்துவந்த 17 வயது சிறுமி பாலியல் தொல்லையால் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் அருண்குமார். இவருக்கு ஆதரவாக சாய் சரவணக்குமார் செயல்பட்டு வருவதாக சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பாராட்டி வரும் நெட்டிசன்கள், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒருவர் அமைச்சராகியிருப்பதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்!

Last Updated : Jun 28, 2021, 6:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details