புதுச்சேரி: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் சாய் சரவணகுமார் இன்று ஈடிவி பாரத்துக்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நான் அமைச்சராகப் பொறுப்பேற்று என்னைச் சந்திக்க வருபவர்களின் குறைகளைக் கேட்டு தீர்த்துவைத்து வருகிறேன். சமீபத்தில் தொகுதி மக்கள் என்னைக் காண சட்டப்பேரவைக்கு வந்தனர்.
அச்சமயம் ஒருவர் நீங்கள் அமைச்சராக இருப்பதால் பேச தயக்கமாக உள்ளது என அக்கூட்டத்தில் பேசினார். அப்போது உங்களில் ஒருவனாக இருக்க நான் தரையில் அமர்ந்துகொள்கிறேன். நீங்கள் உங்கள் குறைகளை இப்போது தெரிவிக்கலாம் என்று கூறினேன். என்னை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
சட்டப்பேரவைக்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மாமேதை அம்பேத்கர் காரணம்.
சட்டப்பேரவையில் எதிரே அமைந்துள்ள எனது ஆசான் அம்பேத்கர் சிலைக்கு நாள்தோறும் மாலை அணிவித்து பேரவைக்குள் நுழைகிறேன். எனது துறையின்கீழ் செயல்படும் சிறுபான்மையின மக்களுக்கு இணையதளம் தொடங்கி அதில் சிறுபான்மை மக்களுக்காகச் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் அதில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.