புதுச்சேரி: புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, காலை நடை பயிற்சிக்காக ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தது.
லட்சுமி 1995 ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமன் மூலம் இக்கோவிலுக்கு குட்டி யானையாக வழங்கப்பட்டு ஐந்து வயதில் கோயிலிக்காக வழங்கப்பட்டது. அன்று முதல் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கி வந்தது.
இந்நிலையில் லட்சுமி இன்று அதிகாலை 6.30 மணி அளவில் நடைப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானை இறந்ததையடுத்து போலீசார் மற்றும் மணகுளவிநாயகர் ஆலய நிர்வாகத்தினர் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்பட்டு கோயில் அருகில் வைக்கப்பட்டது.
லட்சுமி இருதய பாதிப்பால் இறந்திருக்கலாம் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். குருசுகுப்பம் அக்காசாமி மடத்தில் உள்ள இடத்தில் இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது என வருவாய் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். கோயில் அருகே வைக்கப்பட்டுள்ள யானையின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.