புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்களின் திறனை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், “சென்னை மழை வெள்ளத்தை கவலையாகப் பார்க்கின்றேன். மழையை பழி போடக்கூடாது. பொதுமக்கள் பரிதவிப்பதைப் பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது. யாருமே வரவில்லை என பொதுமக்கள் கூறுகின்றார்கள். கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி வீடு, வீடாக ஓட்டு கேட்டு போனார்களோ, அப்படி சென்று என்ன பிரச்னை என்று கேட்டறிய வேண்டும்.
என்னை பொறுத்தவரையில், போர்க்கால அடிப்படையில் மக்களுக்கான உதவிகளை செய்யவேண்டும். மருத்துவர் என்ற முறையில் எனக்கு ஒரு பயம் இருக்கிறது. தண்ணீர் எங்கு தேங்கினாலும் தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளது.
அதனால் விரைவில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கையை விட மக்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதிகமாக கனமழை வரும் என்று நினைத்து முன்னெச்சரிக்கை ச்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்துள்ளார். சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதாக சொன்னார்கள். சிங்கப்பூராக மாற்றுவதாக சொன்னார்கள். அதற்கு நான் சிங்கப்பூராக மாற்றுவோம் என சொன்னீர்கள், பூராக நீரும் வடியும் ஊராக மாற்ற முடியவில்லை என பதிவு போட்டு இருந்தேன்.
பால் விநியோகம் சரியாகி விட்டது என சொன்னார்கள். மூன்று, நான்கு நாட்களாக பால் எங்களது வீட்டிற்கே வரவில்லை. பல இடங்களில் மின்சாரம் வரவில்லை. யாராவது பதிவு போட்டால் தமிழக அரசுக்கு கோவம் வருகின்றது. அதற்கு பதில், அதில் இருக்கின்ற உண்மைத் தன்மையை அறிய வேண்டும்.
விவாதம் செய்வதை விட்டுவிட்டு, பட்டிமன்றம் செய்வதை விட்டுவிட்டு செயல்களில் ஈடுபட வேண்டும். நான் தமிழ்நாட்டுக்காரி என்பதால் மக்களின் துன்பத்தில் பங்கு எடுத்துக் கொள்கிறேன். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து சரி செய்யவில்லை. நடிகர் ஒருவர் பொதுமக்களாகப் பதிவு போட்டார். அந்த பதிவிற்கு மறுபதிவாக மேயர், உங்கள் வீட்டிற்கு மட்டும் தண்ணீர் வந்ததா.. எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லையா? எனப் பதிவு போடுகின்றார்.
தெலுங்கானாவில் கடந்த முதலமைச்சரிடம் மோதல் போக்கு இருந்தது. தற்போதைய அரசு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, தற்போது தான் அரசு அமைந்துள்ளது. நான் யாருக்கும் எதிரி அல்ல. வடக்கு, தெற்கு எனப் பிரித்து பேசுவதை நிறுத்தவேண்டும். நான் தென்னிந்தியன் என்று சொல்வதை விட நான் தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தியன் என்று சொல்லிப் பழகுங்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!