தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுச்சேரி: சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல், மாநில அந்தஸ்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Jan 18, 2021, 8:44 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையின் நான்காவது சிறப்பு கூட்டத்தொடர் இன்று(ஜன.18) சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் கூடியது. முதலமைச்சர் நாராயணசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் , பாஜக உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், புதுச்சேரி நியமன சட்டப்பேரவை உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட 10 பேர் மறைவுக்கு இரங்கல் வாசிக்கபட்டு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சபைக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதே காரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு மதிப்பு கூடுதல் வரி சட்ட முன்வரைவு, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானம் மற்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும்போது ஒரு புறம் மத்திய அரசும் மறுபுறம் ஆளுநரும் தடையாக இருந்து வருகின்றனர். எனவே எந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்க வேண்டிவுள்ளது. எந்தவித அதிகாரமும் இல்லாமல் துணைநிலை ஆளுநர் கோப்புகளை திருப்பி அனுப்பி விடுகிறார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

ஆகவே மாநில அந்தஸ்து ஒன்றுதான் மாநில வளர்ச்சிக்கு முக்கியமான தீர்வு. அதற்காகவே இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. ஆகவே விவசாயிகளுக்கு உதவாத அந்த சட்ட நகலை நான் கிழித்து, அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details