பிங்க் நிறத்தில் பெட்ரோல் பங்க் திறப்பு புதுச்சேரி: பணிக்கு செல்லும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை மாற்றும் வகையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கே.பி.எம் பெட்ரோல் பங்கில், மகளிருக்கு என்று தனியாக பிங்க் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று (ஜன.4) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துக்கொண்டு பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்கை தொடங்கி வைத்தார். பெட்ரோல் போட வந்த மகளிருக்கு ரோஜா பூ கொடுத்தார். தொடக்க நாள் பரிசாக நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
பெட்ரோல் போட வந்த மகளிர்கள் கூறும்போது, "வேலைக்கு செல்லும் போது பெட்ரோல் பங்குகளில் ஆண்களுடன் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. தற்போது மகளிர்களுக்காகவே பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இதேபோன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தனியான பங்க் அமைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி போக்குவரத்து கழகத்தில் உள்ள 100 பேருந்துகள் பழுதாகி உள்ளது. அதனை மாற்றி புதிய பேருந்து வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மகளிர்களுக்கு பிங்க் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்