புதுச்சேரி:அரசின் உயர் அலுவலர்கள் செயல்பாடு அதிகார தோரணையில் நடத்தப்படுவதால், முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக கழக செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது," புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், வடமாநிலத்தைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பிடியில் அரசு நிர்வாகம் சிக்கித் தவிக்கிறது.
இதன் காரணமாகப் பல விஷயங்களில் மக்களின் உரிமைகளும், நியாயங்களும் பறிக்கப்படுகின்றன. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் புதியதாக 250க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் எந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டனர்? இதில் அரசு பணிகளுக்கான வேலைவாய்ப்பு நியமன விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.
தற்போதைய முதலமைச்சர், பத்து வருடங்களுக்கு முன்பு முதலமைச்சராக இருந்தபோது, இவர்களுக்கு பணி நிரந்தம் செய்து அரசு ஊழியர்களாக அங்கீகாரம் செய்தார்.
காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டது தவறான ஒன்றாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அட்டவணையிலுள்ள 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
இதில் அட்டவணையின் கீழுள்ளவர்களுக்குரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசு துறையில் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்தாலும், அட்டவணையிலுள்ள மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்காமல் யார் இந்த உயர் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள்?
அரசு அலுவலரின் தவறான முடிவினால் அட்டவணையைச் சேர்ந்த சுமார் 50 மேற்பட்டவர்களுக்கு அங்கன்வாடி பணியில் சட்டப்படி கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஊடரங்கு அமலில் இருந்தபோது மதுபான, கள்ளுக்கடைகள், சாராயக் கடைகள் திறக்கக்கூடாது என அரசும், கலால் துறையும் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சுமார் 105 நாட்கள் முற்றிலுமாக மதுபான கடைகள் மூடப்பட்டன. மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நாள்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்படவும் இல்லை.
தென்னை மரத்திலிருந்து கள்ளும் இறக்கப்படவில்லை. மூடப்பட்ட நாட்களுக்கு கள்ளுக்கடை, சாராயக்கடைகளுக்கு கிஸ்தி(வரி) தொகையை அரசு உயர் அலுவலர்கள் அடாவடித்தனமாக வசூல் செய்துள்ளனர்.
கடைகள் திறக்கக்கூடாது என சட்டம் போட்டுவிட்டு, கடை திறந்தால் கட்டவேண்டிய கிஸ்தி தொகையை அரசு வசூல் செய்வது எங்கும் இல்லாத ஒன்றாக உள்ளது.
இவ்வாறு வசூல் செய்தது தவறு என்பதால் வசூல் செய்த தொகையைத் திருப்பி வழங்க வேண்டும் என, அமைச்சரவை முடிவு செய்து அனுப்பிய கோப்பை தலைமைச் செயலர், அப்போதைய துணை நிலை ஆளுநரும் தடுத்து நிறுத்தினர்.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மாநில முதலமைச்சர், துணை நிலை ஆளுநர் மாற்றம் ஏற்பட்டும், இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் மாநில தலைமைச் செயலாளரும், நிதி செயலாளரும் சட்டத்திற்கு விரோதமாக மூடிய கள்ளுக்கடை, சாராயக்கடை உரிமையாளர்கள் மீது வரியை திணிக்கிறார்கள்.
இதனால் 100க்கும் மேற்பட்ட கடைக்காரர்களிடமிருந்து ரூ.10 கோடிக்கு மேல் அரசு சட்டவிரோதமாக வசூல் செய்துள்ளது.
இந்த பணத்தை அரசு சட்டப்படி திருப்பி கொடுக்க அரசை வியாபாரிகள் வலியுறுத்தியதையும், ஒரு சில அலுவலர்கள் புதிய அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு பணத்தை திருப்பி செலுத்தாமல் செயல்படுகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளில், அரசின் உயர் அலுவலர்கள் செயல்பாடு அதிகார தோரணையில் நடத்தப்படுகிறது.
எனவே இவ்விரு பிரச்சனைகளிலும் உள்ள உண்மை நிலையை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உரிய வழிவகை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு விருப்பு வெறுப்பின்றி நேர்பாதையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என, அந்த அறிக்கையில் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.