ஹைதராபாத்:புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார வசிப்பிடமான ராஜ் நிவாஸ் செவ்வாய் மாலை சற்று வித்தியாசமாக இருந்தது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அவரது ஊழியர்களும் அப்படியொரு ஆணையை எதிர்பார்க்கவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்த வந்த ஆணை, முன்னாள் காவல்துறை அலுவலரான கிரண்பேடியை பதவியில் இருந்து இறக்கி அந்த இடத்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை கட்டியங்கூறி வரவேற்றது.
ஏற்கெனவே ஆளும் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜினாமா செய்த சூழலில், சபையின் எண்ணிக்கை அமைப்பு சமபலம் கொண்ட இருபிரிவுகளாய்ப் பிளந்து கிடந்தது. இரண்டு கூட்டணிகளிலும் தலா 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் 10, திமுக 3, சுயேச்சை ஒன்று என மொத்தம் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அதைபோல ஒட்டுமொத்த எதிர்க்கட்சி முகாமிலும் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் (ஏஐஎன்ஆர்) 7, அதிமுக 4, பாஜக 3 என்று மொத்தம் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருந்தார்கள்.
கிரண்பேடியின் அதிகார காலத்தில் பாஜகவுக்கு ஆறுதலான ஒரே விஷயம் அந்தக் கட்சியிலிருந்து மூன்று பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதுதான். அந்த நியமனத்தை எதிர்த்து ஆளும் கட்சியான காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோற்றுப் போனது. முதலமைச்சர் நாராயணசாமிக்கு அதுவொரு பலத்த அடி. நியமன உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் வந்ததால், எதிர்க்கட்சி முகாமின் எண்ணிக்கைப் பலம் ஏறியது. எந்தவித ஜனநாயகப் போட்டி இல்லாமலே கூடுதலாக மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. அந்த மூன்று நியமன உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையும் உண்டு.
பலப்பரீட்சையில் இரண்டு தரப்பிலும் முன்பிருந்த எண்ணிக்கை நிலவரமே தொடருமாயின், சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்தின் வாக்கு இறுதியான தீர்ப்பை எழுதிவிடும். ஊடகங்கள் முன்பு இரண்டு முகாம்களும் நம்பிக்கை முகங்களாகத் தோற்றமளித்து தங்களுக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக மார்தட்டி தொடைதட்டிக் கொள்கின்றன. நிஜபலம் காட்டும் எண்ணிக்கை வாக்கெடுப்பின் முடிவில்தான் தெரியும்.
கிரண் பேடி என்னும் காரணி
யூனியன் பிரதேசத்தில் அதிரடியாகக் களமிறங்கிய நாள்முதல் கிரண் பேடி பல்வேறு அரசுக் கொள்கை விவகாரங்களில் மூக்கை நுழைத்து நாராயணசாமியின் கண்களில் விரலைவிட்டு ஆட்டினார். அவரது தவறான அணுகுமுறை ஆரம்பமானது, இலவச அரிசி விநியோகத்தில் அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்த போதுதான். ஆரம்பத்தில் நேரடியான பலன் மாற்று (டிபிடி) மானியத் திட்டத்தை விரும்பிய காங்கிரஸ் தன் தவறை உணர்ந்துகொண்டு அதற்குப் பதிலாக இலவச அரிசித் திட்டத்தின் கோப்பில் கையெழுத்து இடுமாறு கிரணை பேடியைக் கேட்டுக் கொண்டது. காங்கிரஸின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 134 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) வாழ்கின்றன. அவர்களின் குடும்பத் தலைவர்களின் வங்கிக் கணக்குகள் ரேஷன் கார்டில் இணைக்கப் பட்டிருந்தன. பெரும்பான்மையான குடும்பங்களில், வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் அரசுப்பணம் அரிசிக்குப் பதில் மதுவில் மடைமாற்றம் செய்யப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கான கட்டாய ஹெல்மெட், தவறினால் பெரிய தொகையான ரூபாய் 1,000 அபராதம் ஆகியவை ஜனங்களிடம் கோபத்தை ஏற்படுத்தின. புதுச்சேரி மக்களின் அன்பை பாஜகவுக்குச் சம்பாதித்துத் தரவேண்டும் என்னும் அரசக் கட்டளையோடு வந்த கிரண் பேடி அதற்கு மாறாக பலவிசயங்களில் தப்பும் தவறுமான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டார்.
பொதுத்துறை நிறுவனங்களில் சுயபேணல் என்னும் கிரண் பேடியின் கொள்கை அவற்றை நம்பியிருந்த தொழிலாளர்களைப் பெரிதும் பாதித்தது. அந்த நிறுவனங்களுக்கு மேலும் நிதி அளிப்பதை விட்டுவிட்டு, நிறுவனங்களின் விற்பனையிலிருந்து அல்லது வியாபாரத்திலிருந்து அல்லது தொழிலிலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்துக் கொண்டு தொழிலாளிகளின் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்று கிரண்பேடி வலியுறுத்தினார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அன்றாட பணிகளில் அவர் மூக்கை நுழைத்தார்.
அரசியல் ஏக்கம்
புதுச்சேரி மக்களின் இதயங்களை வெல்வதுதான் பாஜகவின் நீண்ட நாளைய கனவுத் திட்டம். 2018ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ்க்கு ‘பஞ்சாப் புதுச்சேரி (காந்தி) பரிவார்’ என்று புதியதோர் பெயரைச் சூட்டினார். ஆனால் அதன் பின்னர், ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இந்திப் பிரதேசமான சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.