புதுச்சேரி:முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (டிச.17) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என சமூக அமைப்பினர் முதமைச்சரிடம் கோரிக்கை வைத்தபோது, அவர்களிடம் பேசிய முதலமைச்சர், புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. புதுச்சேரியில் கோப்புகள் தேங்கி இருக்கின்றன. அதிகாரிகள் கேள்விகேட்டு திருப்பி அனுப்புகின்றனர்.
மாநில அந்தஸ்து பெற முடியவில்லை, திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்காததற்கு மத்திய அரசும், தலைமை செயலாளரும் தான் காரணம் என முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்பபடுத்தியுள்ளார். ரங்கசாமி கடந்த 2016-ல் நிபந்தனையின்றி மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்தார். மாநில அந்தஸ்து தேவை என்று மட்டுமே கூறி வந்தாரே தவிர, டெல்லி சென்று மத்திய அரசை அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
ஆனால், கூட்டணியில் உள்ள பாஜக மாநில அந்தஸ்தை பற்றி குறிப்பிடவே இல்லை என குற்றம்சாட்டினார். மேலும், என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்துக்காத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தனர் என்றும் ஆனால், இப்போது அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
உங்களது கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லையா? என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, மத்திய அரசுக்கு இவர் என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சியினரை கூட்டி ஆலோசனை நடத்தினாரா? எதுவும் இல்லை. மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ரங்கசாமி ஒரு பொம்மையாக ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் கொள்கைகளை நிறைவேற்ற முடியாத அரசாக என்.ஆர்.காங்கிரஸ் அரசு உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில அந்தஸ்து பெறப் போராட தயாரா? ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதற்காக, நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து போகிறார். இவர் முதலமைச்சராக இருக்க ததகுதியற்றவர். ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் ரங்கசாமி இதைவிட்டு ஓட தாயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
ரங்கசாமியும் மண் குதிரையும் ஒன்று, ரங்கசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றும், ஆளுநர் தமிழிசை அடிக்கடி முதலமைச்சரும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம் எனக் கூறி வருகிறார். அண்ணன் எனக் கூறி முதலமைச்சர் ரங்கசாமியை தமிழிசை முதுகில் குத்தி வருகிறார். எங்களது ஆட்சிக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்தபோது, ரசித்த முதலமைச்சர் ரங்கசாமி இப்போது அவரது ஆட்சியில் நாங்கள் பட்டதை அனுபவித்து வருகிறார். கிரண்பேடி விஷத்தை வைத்துக் கொள்வார். ஆனால், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சர்க்கரை கொடுத்து கொன்று வருகிறார்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கஞ்சா எளிதாக கிடைக்கிறது - சிவி சண்முகம் வேதனை!