புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை நேற்று (ஜூலை.27) வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அவர் கூறுகையில், “நமது நாட்டில் தற்போது செல்போன் ஒட்டு கேட்பு சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமாக உள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளன.
இது மிகப்பெரிய ஊழல், இதை பல ஆண்டுகளாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு பயன்படுத்தி வருகிறது. பலரது ரகசியங்களை தெரிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு இந்த மென்பொருளை கொடுக்கமாட்டோம். அரசு கேட்டால் மட்டுமே கொடுப்போம் என இஸ்ரேல் நிறுவனம் கூறியுள்ளது. இதிலிருந்து இந்திய நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசானது பெரிய விலை கொடுத்து அந்த மென்பொருளை வாங்கி அனைவரின் செல்போனையும் ஒட்டுகேட்டுள்ளது தெரியவந்திருக்கிறது
நாடாளுமன்ற நிலை குழு
மேலும் நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற நிலை குழு வைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு செவிசாய்க்கவில்லை. ஒன்றிய அரசு தவறு செய்த காரணத்தால், உளவு பார்த்த காரணத்தால் அந்த விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.