தடை செய்யப்பட்ட மீன் வலை... கடலூர் மீனவர்களைச் சிறைபிடித்த புதுவை மீனவர்கள்..! புதுச்சேரி:கடல் வளத்தைப் பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தல், இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன் பிடித்தல், அதிவேகக் குதிரைத் திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை தடை சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.02) புதுச்சேரி கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன் வலைகளைப் பயன்படுத்தி கடலூரைச் சேர்த்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவர்கள், கடலூர் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், இரு தரப்பு மீனவர்களிடையே கடலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த புதுச்சேரி மீனவர்கள், படகைச் சுற்றி வளைத்து தடை செய்யப்பட்ட மீன் வலைகள் மற்றும் கடலூரைச் சேர்ந்த 7-மீனவர்களைச் சிறை பிடித்து வீராம்பட்டினம் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், இது குறித்து கடலூர் மற்றும் புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின் வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் கடலூர் மீனவர்கள் பயன்படுத்தியது ’அக்னி கூக்கான்’ எனப்படும் தடை செய்யப்பட்ட மீன் வலைகள் என தெரிய வந்தது. இதனையடுத்து இரு தரப்பு மீனவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை மீண்டும் பயன்படுத்த மாட்டோம் என அதிகாரிகள் முன்னிலையில் கடலூர் மீனவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட கடலூர் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவித்தனர்.
இது குறித்து, புதுச்சேரி மீனவர்கள் கூறுகையில் “ மீன்களைப் பிடிப்பதற்காக கூக்கான் என்ற சாதனம் மூலம் யூரியா சாக்கு, பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பா, மணல் மற்றும் சவுக்குகளைக் கடலில் போட்டு கனவா மீன்களைப் பிடிக்கின்றனர். இதன் காரணமாகக் கடல் வால் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே சட்ட விரோதமாகத் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வரும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மாணவிகள் பூ, பொட்டு வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியர்.. அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!