தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இரண்டும் டுபாக்கூர் கட்சிகள்" - நாராயணசாமி கடும் குற்றாச்சாட்டு!

நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாணவர்களுக்கு துரோகியாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் எதிரியாகவும் உள்ளதாக புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 9:47 AM IST

நாராயணசாமி பகிரங்க குற்றாச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பலனடைந்துள்ளதாக தமிழக ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும், தான் அதிகாரத்தில் இருந்தால் நீட் தேர்வு கோப்பிற்கு ஒப்புதல் அளித்து இருக்க மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆணவத்தோடு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஆளுநராக இருக்கும் தகுதியை இழந்து விட்டார். நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாணவர்களுக்கு துரோகியாகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் எதிரியாகவும் செயல்படுகின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, "புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்குச் சென்று அரசியல் பேசுகிறார். இது ஆளநருக்கு அழகு இல்லை. பொது தளத்தில் அரசியல் கருத்தை அவர் தெரிவிக்க விரும்பினால், தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழிசை செளந்தரராஜன் கருத்து சொல்லலாம்‌" என கூறினார்.

மேலும், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தினமும் அரசியல் செய்வதாகவும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் கைப்பாவையாகத்தான் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: மணிப்பூரில் கலவரம் கட்டுக்குள் உள்ளது மத்திய உள்துறை இணை அமைச்சர் பேட்டி

ஆளுநர் பதவி எதற்கு என மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுவதாகவும், பாஜக தலைகீழாக நின்றாலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியால் மாநில அந்தஸ்து பெற முடியாது என்றும், 2024இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக மூன்று மாதங்களில் வழங்குவார்கள் எனவும் அவர் கூறினார்.

அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் திட்டங்கள் காலதாமதம் ஆகிறது என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சொல்வதாகவும், நிதியை ஒதுக்காமல் திட்டங்களை அறிவித்து அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நெருக்கடி கொடுப்பதாகவும், நிதி இல்லாமல் திட்டத்தை எப்படி அதிகாரிகள் செயல்படுத்த முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார், நாராயணசாமி.

"நிதி ஒதுக்காமல் அதிகாரிகள் மீது முதல்வர் பழி போடுவதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நிதி பற்றாக்குறையால் மாநிலம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் டுபாக்கூர் கட்சிகள். முதல்வர், ஆளுநர், சபாநாயகர் அமைச்சர்கள் என அனைவரும் கோமாளிகள்தான்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details