புதுச்சேரி: காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் என் மீதும், காங்கிரஸ் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதையே வேலையாக வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"பிரதமர் புதுச்சேரி வந்தபோது வழக்கம்போல, என்னையும் காங்கிரஸ் கட்சியையும் குறைச் சொல்வதுதான் அவரது உரையிலே இருந்தது. எங்களுடைய ஆட்சியில் நான் ஊழல் செய்துள்ளதாக என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார்.
பிரதமருக்கு நான் சவால் விடுத்திருக்கிறேன். மத்தியில் உங்களுடைய ஆட்சி இருக்கிறது. நான் ஊழல் செய்திருந்தால் அந்த ஊழலை நிரூபிக்க நீங்கள் தயாரா? ஐந்தாண்டு காலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் நான் முதலமைச்சராக இருந்துள்ளேன்.
இந்தக் கூட்டணி ஆட்சியில் நான், என் துறையைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்திருந்தால், ஓய்வுபெற்ற அல்லது இப்போது பதவியில் இருக்கின்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்.
பிரதமர் அதை அறிவிப்பாரா? அவர் சொன்ன ஊழல் புகாருக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.
காரைக்கால் வந்திருந்த அமித் ஷா என்னை வசைபாடியதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை. மோடி 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதை நான் கையாடல் செய்துவிட்டதாகவும், அதில் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொண்டு மீதியைக் காந்தி குடும்பத்திற்குக் கொடுத்தாகவும் என் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார்.