புதுச்சேரிமுன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்றும், இந்த நேரம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும், வரும் 2024 மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்தலாம்.
அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க வேண்டும். இது தோல்வியல்ல வெற்றிக்கான முதல் படி என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இருந்து நிறைய நிதி கொண்டு வந்து வளர்ச்சி காண்போம் என்றனர். ஆனால் ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு அதிக நிதி வாங்கவில்லை என்றும், தற்போது முதலமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட் போடாமல் இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டசபையைக் கூட்ட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பாஜக கூட்டணியில் மத்திய அரசோடு முதலமைச்சர் ரங்கசாமி இணக்கமாக உள்ளார். ஆனால் ஏன் அவர் முழுமையான பட்ஜெட் போடவில்லை? இதற்குப் புதுச்சேரி பாஜக தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றார்களா? அல்லது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையான பட்ஜெட் போட கூடாது என தடுத்து நிறுத்துகின்றார்களா? என பாஜகவும், முதலமைச்சர் ரங்கசாமியும் விளக்கம் தர வேண்டும் என்று கூறிய அவர், கடந்த காங்கிரஸ் அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி எந்தளவிற்கு தொல்லை தர முடியுமோ, அந்தளவு தொல்லை கொடுத்தார்.
அதுபோன்ற தொல்லை தற்போது இல்லை. அப்படி இருந்தும் ஏன் முழு பட்ஜெட்டை போட வில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நான் ஏற்கனவே முதலமைச்சர் , அமைச்சர் அலுவலகங்கள் புரோக்கர் அலுவலகங்களாகச் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தேன் என்றும், அது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் கூறினார். தற்போது காவலர் எழுத்து தேர்வு முடிவடைந்த நிலையில் புரோக்கர்கள் உலா வருகின்றனர். எனது நண்பர் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி என்று கூறியுள்ளனர்.