தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது” - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி - சந்திர பிரியங்கா ராஜினாமா

Puducherry Ex cm Narayanasamy press meet : அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக, தலித் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Ex cm Narayanasamy press meet
புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 7:52 AM IST

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மாநில அந்தஸ்து விவகாரத்தில் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால், 90 சதவீத மானியம் கிடைக்கும் என கருதினோம். அதன் பின், நிலைப்பாட்டை மாற்றி மாநில அந்தஸ்து கேட்டோம்.

யூனியன் பிரதேசத்துக்கு கடன் வாங்கும் அதிகாரம் இல்லை. இதனால் ரங்கசாமி புதுச்சேரிக்கு தனிக் கணக்கு தொடங்கினார். அதில் 70 சதவீத மானியம் 30 சதவீதமாக குறைந்தது. அதன் பின்னர்தான் மாநில அந்தஸ்து கோரிக்கையை ரங்கசாமி ஆரம்பித்தார். அவர் மாநில அந்தஸ்தில் உறுதியாக இல்லை. 2011 முதல் 2016 வரை ஆட்சியில் இருந்தார். கடந்த 2 ஆண்டு மோடி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.

அப்போதும் மாநில அந்தஸ்து பெறவில்லை. 2016இல் காங்கிரஸ் ஆளும் கட்சியானபோது, மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு சென்றபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த ரங்கசாமி வரவில்லை. அவருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை. பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்து கேட்டபோது, கோப்பை (file) கிடப்பில் போட்டனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக மாநில அந்தஸ்து தராமல் தடுத்து நிறுத்தினர். தற்போது ரங்கசாமி முதலமைச்சராகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. மாநில அந்தஸ்து பெற பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளேன் என ரங்கசாமி கூறினார். புதுச்சேரிக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றார்.

இதில் யார் குற்றவாளி? பிரதமரைப் பார்க்க எத்தனை முறை டெல்லிக்குச் சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறிய பிறகு, எதிர்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் இல்லை, வழங்கும் எண்ணம் மத்திய பாஜக அரசுக்கும் இல்லை. ரங்கசாமி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்.

ஒரு பெண் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கு 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநரைச் சந்தித்து, அமைச்சர் சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதம் ஏற்கப்பட்டு, புதுச்சேரி அரசுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒரு பெண் அமைச்சரை அசிங்கப்படுத்தி உள்ளனர். அமைச்சர்கள், முதல்வரின் செயல்பாடுகள் சரியாக உள்ளதா? ஒரு பெண் அமைச்சர் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால், இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருப்பார்? மன வேதனையோடு அந்த கடிதத்தை எழுதியுள்ளார். ஆண் அதிகார வர்க்கம் என்னை செயல்பட விடாமல் தடுத்துள்ளது என்றும், தனிப்பட்ட பிரச்னையை முன் வைத்து பழி வாங்குகின்றனர், சாதி, பாலின ரீதியில் அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சுயரூபத்தை அமைச்சரின் கடிதம் காட்டுகிறது. இது மிகப்பெரும் குற்றச்சாட்டு. இது குறித்து தலித் வன்கொடுமைச் சட்டத்தில் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் பெண்கள் விரோத ஆட்சி நடக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details