புதுச்சேரி:புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நாராயணசாமி, "கர்நாடக மாநில தேர்தலின் போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 500 ரூபாய் கேஸ் மானியம் வழங்கப்படும் என உள்ளிட்ட 5 அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக அறிவித்துள்ளது என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தை வீணடிக்கும் என்றும் பிரதமர் விமர்சனம் செய்தார்.
இதுபோன்ற மானியத்தை கொடுத்து வாக்கு வாங்க காங்கிரஸ் கட்சி தந்திரம் செய்கிறது, இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று சொன்ன பிரதமர் நரேந்திர மோடி இன்று சிலிண்டருக்கு ரூ.200 குறைப்பு என அறிவித்துள்ளார். இது பிரதமர் தான் சொன்ன கருத்துக்கு மாறாக செயல்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தான் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்" என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஏற்கனவே ஒரு சிலிண்டரின் விலை 1150 ரூபாயாக உயர்ந்து விண்ணை எட்டியிருக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியும், மாநில காங்கிரஸ் அரசுகள் அதனை குறைத்தும் கூட, அதைனைப் பற்றி கவலைப்படாத பிரதமர், இந்த 5 மாநில தேர்தல் தோல்வி பயத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்" என விமர்சித்து பேசினார்.
மேலும், "இதன் மூலம் பிரதமர் மோடியின் வேசம் கலைந்துள்ளது. தனிக்கை அறிக்கையில் மத்திய அரசின் 7 திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி பிரச்சனையை முன்வைத்து ஆட்சிக்கு வந்த மோடி, இதற்குப் பதில் அளிக்கவில்லை. மோடி அரசு ஊழல் மலிந்த அரசு என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது" என பேசினார்.