புதுச்சேரி அரசின் மின்துறை தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை பொறியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று(அக்.02) இரவு உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதனையடுத்து ஊழியர்களை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு காவல் துறையினர் துணை ராணுவத்தினர் உதவியோடு வலியுறுத்தினர்.
ஆனால், அதையும் தாண்டி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டாட்சியர் பாலமுருகன் ஒலி பெருக்கி மூலம், ஊழியர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்ததுடன் 10 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி மின் துறை தலைமை அலுவலகத்தின் இரண்டு கதவுகளையும் திறந்து வைத்தார்.
இதனையும் மீறி ஊழியர்கள் அலுவலகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் துணை ராணுவத்தினர் உதவியுடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய உள்ளே நுழைந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள், அமைச்சர் நமச்சிவாயம் ஒழிக என்ற கோஷத்துடன் வெளியேறி தானாக முன்வந்து கைதானார்கள்.
இதனை அடுத்து ஐந்து பேருந்துகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மின் துறை ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகம் முழுவதும் துணை ராணுவம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.