தலைமை செயலகத்தில் புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சுர்பீர்சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்து, 2ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, 233 பதற்றம் நிறைந்த வாக்குசாவடிகளாகவும், 16 மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் மூன்றாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 9 ஆயிரத்து140 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். கரோனா காரணமாக புதுச்சேரியில் 952ஆக இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 559 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் தேர்தல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றவேண்டும். புதுச்சேரியில் வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு 22 உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.