புதுச்சேரி: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சமையல் எரிவாயுவின் விலை ரூ.200/- குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் 'பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்' அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைப் பெண்களுக்குக் கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அரசு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 30) முதல் கூடுதலாக 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும். ஓணம் மற்றும் ரக்க்ஷா பந்தன் தினத்தில் மகளிருக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக இந்த விலைக் குறைப்பு உள்ளது என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.