புதுச்சேரி:ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (பிப்ரவரி 27) கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புதுச்சேரியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் 86 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி, அரசு பல் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சுகாதாரத்துறையில் செவிலியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.