புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பேசியதாவது:
துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு விடுத்த அழைப்பை ஏற்று, நான் ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன். அங்கு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
எனவே, ஆட்சியில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணி அரசு வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கடிதம் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து நான் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டி கருத்துகளைக் கேட்டேன்.