புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், நேற்று அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக மீனவர்கள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது மீனவ மக்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.
அதை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் நாராயணசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். ஆரம்பத்தில் பலரது கோரிக்கைகளை நன்றாக மொழிபெயர்த்த நாராயணசாமி, ஒரு இடத்தில் மட்டும் தவறாக மொழிபெயர்த்தார்.
மூதாட்டியின் வேதனை குற்றச்சாட்டு
மூதாட்டி ஒருவர் எழுந்து, "கடலோரப் பகுதி இப்படித்தான் இருக்கிறது. எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுப்பதில்லை" என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமியை சுட்டிக்காட்டி, "அவரே இருக்காரு, எங்கள வந்து ஒருக்காலமாவது புயலுக்கு வந்து பார்த்திருக்காரா?" என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
மூதாட்டியின் உடல் பாவானையில் உள்ள வேதனையை உணர்ந்துகொண்ட ராகுல் காந்தி உடனே அதை மொழிபெயர்க்குமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அந்த நேரத்தில், மீனவ மக்கள் பலத்த கரவோசம் எழுப்பி, 'அந்த மூதாட்டியின் குரல் பலரின் குரல்'ஆக இருந்ததை உணர்த்தினர்.
தவறாக மொழிபெயர்த்த நாராயணசாமி
ஆனால் விழிபிதுங்கி நின்ற முதலமைச்சரோ பதற்றத்தில், நிவர் புயலின்போது தான் அந்த இடத்திற்கு வந்து ஆய்வுமேற்கொண்டதாகவும், நிவாரணம் வழங்கியதாகவும் தவறாக மொழிபெயர்த்தார்.
ராகுலின் பரப்புரை நிகழ்ச்சியில் தவறாக மொழிபெயர்த்த நாராயணசாமி பலரது கேள்விகளை நன்றாக மொழிபெயர்த்த முதலமைச்சர் ஏன் இதை மட்டும் தவறாக மொழிபெயர்த்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் பலர் மீனவர்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார் என விமர்சித்துவருகின்றனர்.