புதுச்சேரி சட்டப்பேரவைக் குழு அறையில் இன்று (ஜன. 30) முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்பந்தத்தால் கட்டாய தலைக்கவச சட்டத்திற்கு அலுவலர்கள் அரசாணை வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரி நகர மற்றும் கிராம மக்களுக்கு தலைக்கவசம் அணிய முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகு படிப்படியாக அரசாணையை அமல்படுத்த வேண்டும்.
கரோனா வரி விதிப்பால் மதுக்கடைகளில் விற்பனை குறைந்து வரி வருவாய் குறைந்துவிட்டது. இதனால் இனி மதுவிற்கு கரோனா வரி வேண்டாம் என அரசு முடிவுசெய்து கோப்பை அனுப்பினால் தன்னிச்சையாக கிரண்பேடி இரு மாதங்களுக்கு வரி விதித்துள்ளார்.
இது திட்டமிட்டு அரசு மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும் முயற்சி. புதுச்சேரி நியமன எம்எல்ஏ சங்கர் உயிரிழந்ததால் அப்பதவிக்கு இளைஞர் காங்கிரஸ் இளையராஜாவை நியமிக்க மத்திய அரசுக்கு கோப்பினை அனுப்பினோம்.
மத்திய அரசு பாஜக புதுச்சேரி துணைத்தலைவர் விக்ரமனை நியமித்துள்ளது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். மாநிலத்தை ஆளும் அரசின் பரிந்துரையை ஏற்காதது குறித்தும், அவரது நியமனத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்றார்.
முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட தயார் என பாஜகவில் இணைந்துள்ள நமச்சிவாயம் விடுத்துள்ள சவால் தொடர்பாக கேட்டபோது, ’அதற்குப் பதில் வேண்டாம் என நினைக்கிறேன். நான் யாருக்காவது சவால்விட்டு இருக்கிறேனா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது உடனிருந்த அரசு கொறடா அனந்தராமன், அவரது தொகுதியான வில்லியனூரில் இந்த முறை நிற்கட்டும் என்றார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, தன்னை எதிர்த்து நமச்சிவாயம் போட்டியிடத் தயாரா? என சவால்விடுத்தார்.
இதையும் படிங்க:தேர்தல் வியூகம்! ஜே.பி.நட்டா மதுரையில் ஆலோசனை