புதுச்சேரி:சென்னைவாசிகளுக்கு லாங் டிரைவ் என்றால் சட்டென நினைவுக்கு வருவது புதுச்சேரிதான். வங்கக்கடலையும், சூரிய உதயத்தையும் பார்த்தவாறு பயணித்தால் எப்படி இருக்கும். மாலை மயங்கும் நேரத்தில் தென்றலை வருடிக் கொண்டே ஒரு பயணம், இரவில் இருளில் கத்தும் கடலுடன், இளையராஜா இசைடனும் ஒரு பயணம் என பாண்டிச்சேரி என புதுச்சேரியின் செல்லப்பெயரை சொன்னாலே பரவசமாகிவிடுவார்கள் சென்னைவாசிகள். இனி சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமிருந்தும் குவியும் பயணிகளால் வண்ணம் பூசிக் கொள்கிறது புதுச்சேரி.
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதி ஒயிட் டவுண் எனப்படும் எழில் மிக்க பகுதிதான். திரைப்படங்களுக்காக இங்கு முகாமிடாத தமிழ் இயக்குநர்கள் குறைவு. 2011ம் ஆண்டில் 11 லட்சமாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால், ஒயிட் டவுன் நகரப்பகுதியிலிருந்த வீடுகள் வியாபார தளங்களாக ஹோட்டல் , ரெசார்ட்டுகளாக மாறியுள்ளன. நகரப்பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் வார விடுமுறை நாட்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் சுற்றுலா பயணிகள். சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஆயுஷ்மான் பாண்டே தனது அனுபவத்தை ஈடிவி பாரத்துடன் பகிர்ந்து கொண்டார்.
புதுச்சேரியின் அழகே விருந்தினர்களை அவர்கள் வரவேற்கும் பாங்குதான் என்கிறார் ஆயுஷ்மான். கோவாவைப் போன்ற சில ஒற்றுமைகளை புதுச்சேரியில் காணமுடிகிறது. ஆனால், பிரெஞ்சு கட்டட கலை மற்றும் அழகான காபி கிளப்புகள் மூலம் புதுச்சேரி தனித்துவம் கொள்கிறது என்கிறார் அவர். புதுச்சேரியை நினைக்கையில் ராஜஸ்தானின் உதய்பூர் மற்றும் வெனிஸ் நகரின் சாயலையும் உணர முடிகிறது எனும் அவர், தன்னுடைய பார்வையில் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களில் புதுச்சேரியும் இருக்கும் என்கிறார்.
இமாச்சல் பிரதேசம், சிக்கிம், கேரளா போன்ற மாநிலங்கள் சுற்றுலா மூலமே பொருள் ஈட்டுகின்றன. பொருளாதார வளர்ச்சிக்கு எப்போதும் ஒரே வழியை கருத முடியாது. புதுச்சேரியும் தனித்துவத்தால் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். முக்கியமாக பழமையான இடங்களின் அழகை பாதுகாத்து, உள்ளூர் மக்களும் சுற்றுலா மூலம் பொருள் ஈட்டுவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும் என கூறுகிறார் ஆயுஷ்மான்.
புதுச்சேரியில் இதுவரை காந்தி சிலை அருகில் மட்டும் மக்களை கவர்ந்த கடற்கரை, தற்போது பாண்டி மெரினா, ரூபி கடற்கரை, பேரடைஸ்பீச் என செயற்கை கடற்கரைகளால் அழகு பெற்று மிளிர்கிறது. நகரப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட பப்புகள், டிஸ்கோ, டிஜே கிளப்புகள், கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் சமீபத்தில் இரவுநேர கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்கின்றனர் அரசு தரப்பினர்.
மதுவிற்பனை ஒரு பகுதியினருக்கு உவப்பானதாக இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகளை கவர மது ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்கின்றனர், அரசு அனுமதி பெற்று மதுவிற்பனை நடத்துபவர்கள். பழைய பிரெஞ்சு கால சாலைகள் இன்னமும் அகலப்படுத்தப்படாமல் இருப்பதால் விடுமுறை நாட்களில் அதனால் ஏற்படும் சிரமங்களையும் சுற்றுலா பயணிகள் எடுத்து கூறுகின்றனர்.
மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது, இந்திய அளவில் மக்கள் இணையத்தில் தேடும்பட்டியலில் புதுச்சேரிக்கு முக்கிய இடம் உண்டு என்றார். அரசு சுற்றுலாவுக்காக செலவிடுவதைக் காட்டிலும், அதிகமான வருமானம் கிடைப்பதாக கூறினார். சுற்றுலா விளம்பரத்திற்காக சூமார் 3.5 கோடி முதல் 5 கோடி ரூபாய் செலவிடுவதாகவும், 9 கோடி ரூபாய் லாபம் விடுமுறை நாட்களில் கிடைப்பதாகவும் கூறினார். இது தவிர உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் வலுப்பெறுவதாகவும் கூறினார்.
சுற்றுலா வளர்ச்சி இருந்தாலும் எதிர்க்குரல்களும் இல்லாமல் இல்லை சுற்றுலாவை மட்டும் நம்பி தொழில் வளர்ச்சியை கைவிட்டுவிடக் கூடாது என்கிறார். புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் துணை தலைவர் இளங்கோ, "ஒரு காலத்தில் புதுச்சேரி தொழில் நகரமாக உருவெடுத்தது. இதனால், தொழில் சார்ந்த வேலை வாய்ப்புகளும் அதிகம் கிடைத்தன. ஆனால், தற்போது புதுச்சேரி தனது பழைய வாய்ப்புகளை இழந்து, மதுவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஸ்பா, ஓட்டல் என சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அரசு ஊக்கமளிக்கப்படுகிறது" என குற்றம்சாட்டினார்.
யூனியன் பிரதேசமாக பல அதிகாரங்களை மத்திய அரசிடம் கொடுத்து வைத்திருக்கும் புதுச்சேரியில். பாஜக கூட்டணியுடன் என்ஆர் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. கவலை மறந்து களிக்க வரும் பயணிகளிடம் கெடுபிடி காட்டினால் சுற்றுலா சிறக்காது என கூறுகிறது ஆளும் தரப்பு. சுற்றுலா வளர்ச்சியோடு முந்தைய காலத்தைப் போன்று தொழில்துறை வளர்ச்சிக்கும் கவனம் செலுத்துங்கள் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றனர். ஆண்டு முழுவதும் பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரியும் அதன் மக்களும் காலத்திற்கேற்ற மாற்றங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு தான் வருகின்றனர்.