தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசினோம்; பிரதமர் சந்திப்பிற்குப் பிறகு நமச்சிவாயம் தகவல் - புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு

புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவரிடம் பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு
புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் மோடியுடன் சந்திப்பு

By

Published : Jul 1, 2021, 7:56 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக - என்‌.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்வதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாஜக அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிரதமருடன் சந்திப்பு

இந்நிலையில், சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்களான நமச்சிவாயம், சாய் சரவணக்குமார், எம்எல்ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் 13 பேரும் பிரதமர் மோடியை இன்று (ஜூலை 1) சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது, " எங்கள் சந்திப்பின்போது பிரதமரிடம் புதுச்சேரியின் கடன்தொகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரிக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விரைவாக கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

திட்டங்கள் குறித்து கோரிக்கை

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தினோம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை கட்ட நிதி ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

2 நாள் முகாம்

மேலும், புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் அமைக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா ஆகியோரையும் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் சந்திக்கின்றனர். மேலும், அவர்கள் இரண்டு நாள்களுக்கு டெல்லியில் தங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஜிஎஸ்டி பொருளாதாரத்தின் மைல்கல்- பிரதமர் நரேந்திர மோடி!

ABOUT THE AUTHOR

...view details