புதுச்சேரி சட்டப்பேரவை கட்டடம் பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்டு, தற்போதுவரை இயங்கிவருகிறது. ஆரம்ப காலத்தில் இக்கட்டடம் பிரெஞ்சுக்காரர்கள் பயிலும் மருத்துவக் கல்லூரியாக இயங்கியது.
பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற பிறகு, 1963ஆம் ஆண்டுமுதல் இக்கட்டடம் சட்டப்பேரவையாக மாற்றப்பட்டது. இங்கிருந்த மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.
பழையன கழிந்து புதியன புகும் புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை, சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டடமாகும். அதில், சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள் அறை மட்டுமே உள்ளது. பேரவை ஓரிடத்திலும், தலைமைச் செயலகம் வேறு இடத்திலும் இயங்கிவந்ததால் நிர்வாக ரீதியாக சில தாமதம் ஏற்பட்டது.
இடப்பற்றாக்குறை உள்ளதால் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு செயலர்கள் பேரவை வளாகத்திற்குள் வாகனங்களில் வந்துசெல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இவற்றைக் கருத்தில்கொண்டே 2008ஆம் ஆண்டு, என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் தட்டாஞ்சாவடி தொகுதியில் புதிய சட்டப்பேரவை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தினை ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் செயல்படுத்த முடியவில்லை.