தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாராயணசாமி ராஜினாமா: கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி

நாராயணசாமி ராஜினாமா
நாராயணசாமி ராஜினாமா

By

Published : Feb 22, 2021, 11:50 AM IST

Updated : Feb 22, 2021, 12:48 PM IST

11:49 February 22

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து, அவைத் தலைவர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். ராஜினாமா குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்தான் முடிவு எடுக்க வேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய நாராயணசாமி, "புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. புதுச்சேரியில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணி

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுவையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்றன. அதுபோல் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெற்றிபெற்றது. மாகே தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவரது பதவி கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் பறிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் திமுக உறுப்பினர் வெங்கடேசன் உள்பட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் 9, திமுக 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.

இதனால், ஆளும் கட்சிக்கு 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் ஆதரவாக இருந்தார்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் (பாஜக நியமன உறுப்பினர்கள் மூவர் உள்பட) இருந்ததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

Last Updated : Feb 22, 2021, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details