புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மறுப்பு புதுச்சேரி:புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவசர செயற்குழு ஆலோசனைக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (அக்.14) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தோடு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேசமாக தொடரும் என மத்திய அரசு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், திமுக தலைமையில், மாநில அளவிலான மிகப்பெரிய பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது, “தேர்தலின்போது பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தால், மத்தியிலும் தங்கள் ஆட்சி நடைபெறுவதால் மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம். மேலும், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்து தீர்மானத்தை மக்கள் போராட்டத்திற்கு பிறகு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் மத்திய அரசு, மாநில அந்தஸ்து தர மறுத்து விட்டது. மத்திய அரசு, மாநில அந்தஸ்து தர முடியாது என கடிதம் அனுப்பியவுடன், முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் கூட்டணியில் உள்ளார். எனவே இதனை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"நீங்கள் தான் என் தாய்.. நீங்கள் தான் என் சகோதரிகள்..." மகளிர் உரிமை மாநாட்டில் ஒலித்த பிரியங்கா காந்தியின் குரல்!