புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில், சுயேச்சை உள்பட மொத்தம், 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும், 10 லட்சத்து 4 ஆயிரத்து, 507 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதற்காக, 635 இடங்களில், ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக, ஆயிரத்து 677 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஆயிரத்து 558 விவிபாட் எந்திரங்கள், ஆயிரத்து 558 கண்ட்ரோல் யூனிட் பயன்படுத்தப்படுட்டன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்து 835 பேர் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்றது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இதற்கிடையே, மாலையில் வாக்களித்த கரோனா நோயாளிகள் விவரத்தை புதுச்சேரி சுகாதாரம் துறை வெளியிட்டது. அதில் புதுச்சேரி - 220, காரைக்கால் - 247, மாகி - 25, ஏனாம் -18 என மொத்தம் 510 பேர் வாக்களித்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.