புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அ. அன்பழகன் செய்தியாளர்களை இன்று (ஜூன்.29) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதை விட்டு, வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் எதிராக செயல்பட முயற்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கேலிக்கு உள்ளாக்கப்படும் அரசியலமைப்பு சட்டம்
’மத்திய அரசு’ என்றுள்ளதை ’ஒன்றிய அரசு’ என அழைத்து அரசியலமைப்பு சட்டத்தையே கேலி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை திமுக சீர்குலைக்கிறது.
வாசகத்தை திரிக்கும் திமுக
புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பில் துணை நிலை ஆளுநரால் வாசிக்கப்பட்ட உறுதிமொழியை தவறாக சித்தரித்து தனது தவறுக்கு வலுசேர்க்க திமுக முயற்சிக்கிறது. ”இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்புக்கு உள்பட்ட புதுச்சேரியின் அமைச்சராக பதவியேற்றுள்ள” என்ற வாசகத்தை தனக்கு வசதியாகத் திரித்து, தனது தவறை நியாயப்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.