புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், மருத்துவக் கல்வியில் புதுச்சேரி மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 64 இடங்களில் 31 இடங்களில் தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மாநிலத்திற்கு ஆண்டுதோறும் இழைக்கப்படும் அநீதி.
ஐந்தாண்டுகள் புதுச்சேரி மாநிலத்தில் குடியிருந்தால் மட்டுமே, புதுச்சேரி குடியுரிமை பெற முடியும். புதுச்சேரியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஓராண்டு பணிபுரிந்தவர்களின் பிள்ளைகளுக்கு மாநிலத்திலுள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அளிப்பது என்பது தவறான ஒன்று.