புதுச்சேரி:அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(32). இவர் தமிழ்நாடு எல்லைப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காக 7 வயது மகன் பிரதீசுடம் சென்று விட்டு, தீபாவளியை கொண்டாட இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் நாட்டுப் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தந்தை மகன் உயிரிழப்பின் எதிரொலி
விபத்தின்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஷர்புதீன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால், இருமாநில காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று வெடிவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.