தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (ஜுன் 15) மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வத்தைத் தவிர வேறுயாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இன்று காலை கூடிய புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் இணைந்து அவரது இருக்கையில் அமரவைத்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வின்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நாஜீம், ரங்கசாமியை பிரம்மா என்று கூறி நகைச்சுவையாக பேசியதால் சபையில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது.