புதுச்சேரி சட்டப்பேரவைக் கட்டடம் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இக்கட்டத்தில், சட்டப்பேரவை அரங்கம், முதலமைச்சர், அமைச்சர்கள் அறை மட்டுமே உள்ளன. பேரவை ஓரிடத்திலும், தலைமைச் செயலகம் வேறு இடத்திலும் இயங்கி வந்ததால் நிர்வாக ரீதியாக சில தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், புதிய சட்டப்பேரவை கட்டும் பணி ரூ. 220 கோடியில் தட்டாஞ்சாவடியில் தொடங்கப்படவுள்ளதாக சபாநாயகர் செல்வம் ஜூன் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் இன்று (ஜூலை.5) மாலை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் முன்னிலை வகித்தனர். துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய சட்டப்பேரவை வளாகம், கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சபாநாயகர் அரசு செயலர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில், தற்போது இயங்கி வரும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு மாற்று ஒதுக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.