புதுச்சேரி:நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 'வாணிஜ்ய உத்சவ்" என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, புதுச்சேரி பல்கலைக்கழகம் கலாச்சார மையத்தில் நேற்று (செப்.21) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாநாடு, கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
முதலமைச்சர் குற்றச்சாட்டு
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் மத்திய அரசு சில சலுகைகளை கொடுக்காததால், புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன.
வருங்காலங்களில் ஏற்றுமதியை இரண்டாயிரம் கோடியில் இருந்து நான்கு ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அலுவலர்கள் தொழிற்சாலைகளை தொடங்க எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும். முதலீட்டாளர்களை அலைக்கழிக்க கூடாது. தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதை எளிதாக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.