பெங்களூரு : ஜெயஸ்ரீ கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட உமேஷ் ரெட்டியின் மரண தண்டனையை உறுதி செய்து பெங்களூரு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உமேஷ் ரெட்டி. இந்தப் பெயரை கேட்டாலே கர்நாடக பெண்கள் குலைநடுங்கினர். ஒரு காலத்தில் இவர், தொடர்ச்சியாக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, கொன்றார்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 18 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். எனினும் காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் 21 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றது தெரியவந்தது.
இந்நிலையில் உமேஷ் ரெட்டி மீதான வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, உமேஷ் ரெட்டி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவில், சிறையில் நன்னடத்தை கருதி தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரதீப் சிங் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், உமேஷ் ரெட்டியின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். எனினும் இந்த வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஆறு வார காலங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவலரான உமேஷ் ரெட்டி சிஆர்பிஎஃப் படை பிரிவில் பணிபுரிந்தவர் ஆவார். இவர் 1996இல் பெங்களூருவில் சிறுமி ஒருவரை மானபங்கம் செய்து தப்பினார்.
தொடர்ந்து சீரியல் கில்லரான உமேஷ் ரெட்டி, தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தார். வீட்டில் தனியாக பெண்கள் இருப்பதை அறிந்தால், உமேஷ் ரெட்டி அங்கு சென்று தண்ணீர் கேட்பார், அப்போது பெண்கள் கதவை திறந்தால் வீட்டுக்குள் சென்று அப்பெண்ணின் வாயை பொத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடுவார்.
இந்நிலையில் 1998இல் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். இந்த வழக்கில் உமேஷ் ரெட்டிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக உமேஷ் ரெட்டியின் தாயார் தனது மகனின் உயிரை காக்கும் விதமாக 2013இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதனை ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். இந்நிலையில் அவரின் மரண தண்டனையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பாலியல் வன்கொடுமை: விமானப்படை அலுவலர் சிறையில் அடைப்பு