வேளாண் சட்டம் 2020
நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கடும் அமளிக்கு மத்தியில் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் புதிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவுடனான கூட்டணி குறித்தும் மறுபரிசீலனை செய்வதாகக் அக்கட்சி கூறியுள்ளது.
மூன்று வேளாண் சட்டங்கள்
விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா; விவசாயிகள் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா; மற்றும் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா ஆகிய இந்த மூன்று மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவுள்ளதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த மூன்று மசோதாக்களும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தங்கள் பொருள்களை மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. மேலும், வேளாண் தொழில் நிறுவனங்களுடன் தனிப்பட்ட வகையிலும், விவசாயிகள் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுக் கொள்ளலாம்.
முக்கிய பொருள்களை எவ்வளவு தூரம் சேமித்து வைக்கலாம் உள்ளிட்ட வரம்புகளையும் இது நீக்குகிறது. இந்தப் புதிய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் இனி தங்கள் பொருள்களை எந்த மாவாட்டத்திற்கும் எந்த மாநிலத்திற்கும் விற்பனை செய்ய எடுத்துச் செல்லலாம்.
இதற்காக செஸ் உள்ளிட்ட எந்த வரியையும் விவசாயிகள் மீது மாநில அரசால் விதிக்க முடியாது. ஒப்பந்த விவசாயத்திற்குத் தேவையான சட்டங்களையும், இந்த மசோதா வழங்குகிறது. அதாவது விவசாயிகளும், வாங்குபவர்களும் அறுவடை செய்வதற்கு முன்பே தேவையான உடன்பாட்டை எட்டலாம்.
மேலும், அசாதாரண சூழ்நிலைகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை மிக அதிகமாக உயரும்போது, அவற்றை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது. அரசியல் கட்சிகள், பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) போன்ற வேளாண் அமைப்புகளும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி) போன்ற பெரிய விவசாய அமைப்புகளும், பெரும்பாலான விவசாயிகளும் இந்த மசோதாக்களை எதிர்க்கின்றன.
இந்த மசோதாக்கள் பெரிய நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் உதவாது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது அழிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இந்தச் சட்டங்களை கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான "அப்பட்டமான ஒரு தாக்குதல்" என்று விமர்சித்துள்ளது.
மேலும், இந்தச் சட்டங்களை நிராகரிப்பதாகவும், பஞ்சாப் அரசு தனது சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ் தவிர, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும், இந்த மசோதாக்களை எதிர்க்கின்றன. இருப்பினும், முன்பு, பாஜகவுடன் கூட்டணயில் இருந்த சிவசேனா இந்த மசோதாக்களை ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் பாஜக அவற்றை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது.
அதே நேரம் பிஜூ ஜனதா தளம் இந்த மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முதலில் இந்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கினர். விரைவிலேயே ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவின. தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயக் குழுக்கள் அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019
கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியபோது நாடு முழுவதும் பெரியளவில் போராட்டம் நடைபெற்றன. இந்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, பவுத்த, ஜோராஸ்ட்ரியன் அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள்.
மாறாக, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். மேலும், மூன்று நாடுகளில் வந்த ஆறு மதங்களை சேர்ந்த மக்கள் இந்தியாவில் 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஆறு ஆண்டுகள் வசித்திருந்தாலேயே குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ (எம்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியாது என்று கூறி, இந்த மசோதா கடுமையாக உறுதியாக எதிர்த்து வருகின்றன.
மேலும், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, சீக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. இது 1985ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் உடன்படிக்கையின் விதிகளை ரத்து செய்யும் வாய்ப்புள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் உடன்படிக்கையில் அனைத்து மதங்களுக்கும் ஒரே விதமான விதிகளே ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.