புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி புதுச்சேரி:புதுச்சேரி மாநில அனைத்து தொழிற்சங்கங்கள் AITUC, CITU, INTUC, AICCTU, LLF, MLF, NDLF, விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதன்படி, புதுச்சேரி N.R காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை என குற்றம் சாட்டியும் உணவு, மருந்துகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்கவில்லை என்றும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைத்திட வேண்டும், தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் 26 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்திட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், அனைத்து தொழிற்சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்த ஊர்வலத்தை, மிஷின் வீதி சந்திப்பில் தடுப்புக் கட்டைகள் அமைத்து போலீசார் தடுத்தனர். அந்த இடத்திலேயே போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனை அடுத்து, போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக தடுப்புக் கட்டைகள் மீது ஏறி முன்னேற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க மற்றும் விவசாயச் சங்கங்களை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:"அரசியல் போராட்டம் நடத்தி தமிழீழ உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்" - பிரபாகரன் மகள் துவாரகா என பெண் வீடியோ வெளியீடு!