நாட்டில் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எல்ஐசி, இரண்டு பொதுத் துறை வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என நிதிநிலை அறிக்கைத் தாக்கலின்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது மே மாதத்திற்குள் நிறைவடையும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 64 நாள்களுக்குள் ஏலம்விடப்படும் என அரசு முடிவு எடுத்தது. பலர் ஏலம் கேட்டுள்ளனர். அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்துள்ளோம். 60,000 கோடி ரூபாய் கடனில் ஏர் இந்தியா நிறுவனம் மூழ்கியுள்ளது. எனவே, அதன் பங்குகளை விற்பதே சரி.
கரோனா இரண்டாவது அலையின் காரணமாக 100 விழுக்காடு விமானங்களை இயக்குவது தாமதமானது. ஆனால், தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்தை முடக்கும் பேச்சுக்கே இடமில்லை. விமான போக்குவரத்தே பாதுகாப்பானது" என்றார்.