டெல்லி:கரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்கே சிரமப்பட்டு வந்தனர். அப்போது, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKAY) எனும் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் அரசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கம் நீக்கப்பட்டபோதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில், பல மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு வந்த இத்திட்டம், கடந்த 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், இத்திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஒரு பக்கம் அரசியல் வட்டாரங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:காஷ்மீரில் பொருளாதார பயங்கரவாம் நடக்கிறது - மெஹபூபா முஃப்தி