பெங்களூரு : சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிட்டு உள்ள பிரதமர் மோடி, அதற்காக பெங்களூரு விரைந்தார்.
நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி அனுப்பியது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது.
இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் அமைதியான முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி, இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, தென் ஆப்பிரிக்காவில் இருந்தவாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்தியா வந்ததும் சந்திரயான் 3 திட்டத்திற்காக அயராது உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளையும் நேரில் அழைத்து பாரட்டுவதாக தெரிவித்தார்.