சென்னை : சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. நாட்டின் 12-ஆவது வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஏப்.08) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்கிறார்.
தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில்(Vande bharat 20644) காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயில்(Vande bharat 20643) இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும் எனக் கூறப்பட்டு உள்ளது.
திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாரத்தின் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்தின் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் 495 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை - கோவை பயணத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடக்கத்தில் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கவும் பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப 16 பெட்டிகளாக உயர்த்தவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. குளிர்சாதன வசதி, சொகுசு இருக்கைகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 536 இருக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.