அகமதாபாத்:பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிசம்பர் 28) உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 100 வயதாகும் ஹீராபென் குஜராத் சட்டப் பேரவை தேர்தலின்போது வாக்களித்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4ஆம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றிருந்தார்.
இவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு வருவதாக தெரிகிறது. அகமதாபாத்தின் நரோடா, சர்தார் நகர் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. ஹீராபென் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் ஹீராபென் மோடியின் உடல் நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று (டிசம்பர் 27) பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி குடும்பத்தினருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.