டெல்லி:கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் பிரதமர் மோடி மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசி வருகிறார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசினார். இது அவரது 98-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். விரைவில் 100வது நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தரப்பில் திட்டமிட்டுள்ளது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்திய தயாரிப்பு விளையாட்டு பொருட்களுக்கு சர்வதேச அளவில் தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார். உள்நாட்டை காட்டிலும் வெளிநாடுகளில் இந்திய விளையாட்டு பொருட்களின் தேவை பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை பாராட்டினார். ஈ-சஞ்சீவனி திட்டத்தை எடுத்துக்காட்டாக கூறிய பிரதமர் மோடி, மருத்துவர்களுடனான டெலி கன்சல்டேசன் எனப்படும் தொலை ஆலோசனையில் ஈடுபட இது முக்கிய கருவியாக மாறி உள்ளதாக கூறினார்.
நாட்டின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இந்த தொலை ஆலோசனை கருவி மூலம் மருத்துவர்களுடன் கலந்துரையாட முடியும் என்றும் அதற்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் வழிவகுத்து கொடுத்து உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திலும் டிஜிட்டல் இந்தியா திட்ட முயற்சிகளின் தாக்கத்தை காண முடிவதாக தெரிவித்தார்.