உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள கர்வால் கேரியில், பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.16) திறந்து வைத்தார்.
சுமார் 341 கி.மீ., நீளமுள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, அவசரகாலத்தில் போர் விமானங்கள் தரையிறங்க மற்றும் புறப்பட ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.
இந்தச் சாலை லக்னோ மாவட்டத்தில் உள்ள சௌத்சராய் கிராமத்திலிருந்து தொடங்கி, பிகார் எல்லையில் இருந்து கிழக்கே 18 கி.மீ., தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 31இல் அமைந்துள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.
பூர்வாஞ்சல் விரைவுச் சாலை இது குறித்து நேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், 'உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு நாளை ஒரு சிறப்பு நாள். பிற்பகல் 1:30 மணிக்கு, பூர்வாஞ்சல் விரைவுச் சாலை திறந்து வைக்கப்படும். இந்தத் திட்டம் உ.பி.யின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (நவ.16) இந்த சாலை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'பூர்வாஞ்சல் விரைவுச் சாலை (Purvanchal Expressway) தொடங்கி இருப்பதால் பல மாநில மக்கள் பயன் பெறுவர்.
டெல்லியில் இருந்து செல்லும் வாகனப் போக்குவரத்து நேரம் குறையும். பிகாருக்கு விரைவில் செல்ல முடியும். முதலமைச்சர் யோகி ஆட்சியில் மக்கள் பலர் பயன்பெற்றுள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கு (Purvanchal Expressway) அடிக்கல் நாட்டியபோது, இதே சாலையில் ஒருநாள் விமானத்தில் தரையிறங்குவேன் என நினைக்கவில்லை. நாட்டின் சீரான வளர்ச்சியும் சமமாக இருப்பது முக்கியமாகும்.
நாட்டின் செழிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாட்டின் பாதுகாப்பும் முக்கியம். பூர்வாஞ்சல் விரைவுச் சாலை அவசரகால சூழ்நிலைகளில் இந்திய விமானப் படைக்கு எப்படி மேலும் ஒரு சக்தியாக மாறியுள்ளது என்பதை விரைவில் பார்க்கலாம்' எனப் பேசினார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!